நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை மையமாகக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியால், மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து நான்காவது நாளாக பாதிக்கப்பட்டது. மக்களவையும் மாநிலங்களவையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டதால் அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
மாநிலங்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக உடனடியாக விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், விவாதத்திற்கு முன்நிபந்தனைகளை விதித்து அதிலிருந்து விலக எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலில் ராஜினாமா செய்த பிறகே விவாதத்தில் பங்கேற்போம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்துள்ளதாகவும், இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அரசு தரப்பில் பேசிய ஜே.பி. நட்டா, விவாதம் நடத்த அரசு தயாராக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அவையை இயங்க விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.
மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரமும் தொடர்ந்து நான்காவது நாளாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், விவாதம் நடைபெற வேண்டிய தேதி மற்றும் கால அளவை எதிர்க்கட்சிகளே முடிவு செய்யலாம் என்றும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதற்கிடையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அழைப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சபாநாயகரை சந்தித்து நீட் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
