புதுடில்லி: NEET தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் Central Bureau of Investigation அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை National Testing Agency நடத்தி வருகிறது.
இந்தாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். ஆனால், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், வினாத்தாள் Nashik நகரில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டு, அங்கிருந்து Rajasthan வழியாக பிற மாநிலங்களுக்கு கசிந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் நாசிக்கை சேர்ந்த ஷுபம் கைர்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், Gurugram நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அச்சிடப்பட்ட வினாத்தாள் நகலை ஷுபம், அந்த டாக்டரிடம் வழங்கியதாகவும், பின்னர் அந்த வினாத்தாள் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இந்த இரு சகோதரர்களும் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ரூ.30 லட்சம் கொடுத்து வினாத்தாளை வாங்கியுள்ளனர். பின்னர் அந்த வினாத்தாளை தங்கள் உறவினர்கள் மற்றும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், Sikar பகுதியில் செயல்பட்டு வந்த நீட் பயிற்சி மையங்கள் மற்றும் ஆலோசனை முகவர்களுக்கும் இந்த வினாத்தாள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் மட்டும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் சென்றிருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது.
இந்த வினாத்தாளில் இருந்த 410 கேள்விகளில், 120 கேள்விகள் உண்மையான தேர்வில் இடம்பெற்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், யாஷ் யாதவ் மற்றும் ஷுபம் கைர்னர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், Maharashtra, Kerala, Uttarakhand, Bihar உள்ளிட்ட பல மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்புகள் மற்றும் மின்னணு சாதனங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
