‘இஸ்லாமிய நேட்டோ’ உருவாகிறதா? துருக்கி, கத்தார் இணையும் என பாக். தகவல்
இஸ்லாமாபாத்: Pakistan மற்றும் Saudi Arabia இடையே ஏற்கனவே கையெழுத்தாகியுள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில், Turkey மற்றும் Qatar ஆகிய நாடுகளும் இணைய உள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் Khawaja Asif தெரிவித்துள்ளார்.
உலகளவில் செயல்பட்டு வரும் NATO கூட்டணியில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டணியின் முக்கிய அம்சமாக, உறுப்பினர் நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது முழு கூட்டணியின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும்.
இதற்கு இணையாக, இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான அடித்தளமாக, கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஒப்பந்தத்தில் துருக்கி மற்றும் கத்தார் இணையுவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது சாதாரண கூட்டணி அல்ல என்றும், நான்கு நாடுகளின் தனித்துவமான ராணுவ மற்றும் பொருளாதார பலங்களை ஒருங்கிணைக்கும் “மெகா கூட்டணி” ஆக இருக்கும் என்றும் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் Iran மீது United States மற்றும் Israel மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பிறகு, தங்களை பாதுகாத்துக்கொள்ள புதிய கூட்டணி தேவைப்படுவதாக இந்த நாடுகள் கருதியுள்ளதாக சர்வதேச விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், இந்த ‘இஸ்லாமிய நேட்டோ’ கூட்டணி இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்களிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, துருக்கி ஏற்கனவே Kashmir விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால், இந்த கூட்டணி எதிர்காலத்தில் பிராந்திய பாதுகாப்பு சமநிலையை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், கூட்டணி நாடுகள் “கூட்டு பாதுகாப்பு” என்ற அடிப்படையில் தலையிட வாய்ப்பு உருவாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
