சென்னை: மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் எத்தனை முறை தோல்வியை சந்தித்தாலும், போராட்டத்தை கைவிடவில்லை. மூன்று, நான்கு இடங்களுக்கு யாரிடமும் காத்திருந்து அரசியல் செய்யவில்லை. இன்று அரசியல் வியாபாரமாக மாறியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்து கட்சி தொடங்கி, பின்னர் அவர்களுடனே கூட்டணி வைத்து அவர்களுக்காகவே வேலை செய்வது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லஞ்சமும் ஊழலும் அதிகரிக்கும் என்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க. வந்தால் நேர்மை மட்டுமே நிலவும் என சொல்ல முடியுமா? இரு கட்சிகளும் சேர்ந்து மீண்டும் கொள்ளையடிப்பார்கள் என குற்றஞ்சாட்டினார்.
காரைக்குடி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
“அவர்கள் இதுவரை நாய், நரி, பூனை போன்றவற்றையே பார்த்திருப்பார்கள்; புலியை இப்போது தான் பார்க்கின்றனர். அதனால் தான் என்னை பார்த்து பயப்படுகின்றனர்,” என்று சீமான் கூறினார்.
மேலும், விஜய் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அவர், “அவரின் அரசியல் என்ன என்பது எனக்கு தெரியாது. அடக்குமுறைக்கு அஞ்சாமல், அனுமதி கிடைக்காவிட்டாலும் பிரசாரம் செய்ய வேண்டும். அடக்குமுறையை மீறி நிற்க வேண்டும். விஜயின் அரசியல் என்னை பாதிக்காது,” என்றார்.
“நான் திரையுலகில் இருந்து வந்து கட்சி தொடங்கி ரசிகர்களை மட்டும் சந்திப்பவன் அல்ல; போராட்டங்களிலிருந்து வந்தவன்.
எனக்கு ஓட்டு போடுபவர்கள் காற்றில் பறக்கும் புதர்கள் அல்ல; புயலிலும் உறுதியாக நிற்கும் நெல் மணிகள்,” என்று அவர் தெரிவித்தார்.
