நான் செந்தில் பாலாஜியாக இருந்திருந்தால் அந்தப் பணம் என் வீட்டுக்கு வந்திருக்கும்: அமைச்சர் விக்னேஷ்
கோவை: மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊழல் பாட்டில் ஊழல்தான் என்றும் அமைச்சர் விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
ஒரு மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.140 ஆக இருந்தது. காலி பாட்டிலைத் திரும்பக் கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும் என்று கூறி, மொத்தம் ரூ.150 வசூலித்தனர். இதனுடன் கடந்த ஆட்சியில் கட்சிப் பண்ட் என்ற பெயரில் மேலும் ரூ.10 வசூலிக்கப்பட்டதால், மொத்தமாக ரூ.160 பெறப்பட்டது. தற்போது அந்தக் கட்சிப் பண்ட் முறையை நாங்கள் ஒழித்துவிட்டோம்.
நான் செந்தில் பாலாஜியாகவோ அல்லது கடந்த கால அமைச்சர்களைப் போலவோ இருந்திருந்தால், அந்தப் பணம் எனது வீட்டுக்கு வந்திருக்கும். ஆனால், முதல்வரின் வழியில் செயல்படும் நாங்கள் அது மக்களின் பணம் என்பதால் மக்களுக்கே செல்ல வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நேற்று டாஸ்மாக் தொடர்பான விவகாரம்தான் முக்கியப் பிரச்னையாக இருந்தது. மது கிடைக்காதவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அன்று ஒருநாள் மது அருந்தாமல் இருந்ததால், அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.
திரும்பப் பெறப்படாத பாட்டில்கள் தொடர்பான கணக்குகளிலும் முறைகேடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலேயே மிகப்பெரிய ஊழல் பாட்டில் ஊழல்தான்.
இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
