இண்டி கூட்டணியின் பொதுக்கூட்டத்தால் ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிப்பா? வர்த்தகர்கள் கவலை
புதுடெல்லி: டெல்லியில் இண்டி கூட்டணி நடத்திய பொதுக்கூட்டத்தால் தீபாவளி பண்டிகைக் கால வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று இண்டி கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள மின்டோ சாலையில் இருந்து ராம் லீலா மைதானம் வரை கூட்டணித் தலைவர்கள் திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், டெல்லி வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக் காலத்தில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவே பொதுக்கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களை பாஜகவின் முகவர்கள் என்று கூறுவது தவறானது.
மத்திய டெல்லி மற்றும் பழைய டெல்லி பகுதிகளில் உள்ள 20 முக்கிய சந்தைகளில் தினமும் சுமார் ரூ.12,000 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தப் பேரணியால் 80 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசுகிறார். ஆனால், 2.5 லட்சம் கடைகள் மூடப்பட்டு, சாலைகளும் மறிக்கப்பட்ட நிலையில், பேரணிக்கு வரும் மக்கள் எங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்?
இவ்வாறு பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
