புதுடில்லி: ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பிய பிரதமர் Narendra Modi, முக்கிய அமைச்சர்களுடன் சுமார் நான்கரை மணி நேரம் விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் விவசாயம், வனம், தொழிலாளர் நலன், சாலைப் போக்குவரத்து, கார்ப்பரேட் விவகாரங்கள், வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது அனைத்து அமைச்சகங்களும் தங்களது துறை செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்த விரிவான அறிக்கைகளை சமர்ப்பித்தன. அவற்றை ஆய்வு செய்த பிரதமர் மோடி, அனைத்து அமைச்சகங்களிலும் நிர்வாக சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தினார்.
அரசு நிர்வாகம் முழுமையாக பொதுநலன் மற்றும் மக்களின் வசதியை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கண்டிப்பாக தெரிவித்தார். மேலும், அரசு பணிகளில் கூடுதல் செயல்திறன் இருக்க வேண்டும் என்றும், கோப்புகள் விரைவாக நகர்த்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தேவையற்ற நடைமுறை தாமதங்களை தவிர்க்க அமைச்சகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைய, அனைத்து அமைச்சர்களும் தெளிவான நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
