“நாடு போற்றும் மூன்று எழுத்து மந்திரம் விஜய்” – சட்டசபையில் கருப்பையா புகழாரம்
17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை (மே 11) 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது அவையில் உரையாற்றிய கருப்பையா, முதல்வர் விஜயை பாராட்டி பேசியது கவனம் ஈர்த்தது.
சட்டசபைக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்ற அவர், “துணிவு, கொடைத்தன்மை, அறிவு, முயற்சி ஆகிய நான்கும் தலைவருக்கே உரிய இயல்புகள்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இந்த இயல்புகளை தனக்குள் கொண்ட தலைவனாகவும், இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், இன்று நாடு முழுவதும் உச்சரிக்கப்படும் மூன்று எழுத்து மந்திரமாகவும், தமிழக மக்களுக்காக உழைக்கும் இயந்திரமாகவும் திகழும் முதல்வர் விஜயை வணங்கி வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “17வது சட்டசபை கூட்டத்தொடரின் தற்காலிக தலைவராக இந்த எளிய தொண்டனுக்கு வாய்ப்பு வழங்கிய தலைவருக்கும், என்னை எம்எல்ஏவாக தேர்வு செய்த சோழவந்தான் தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
மேலும், “வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டசபையின் தற்காலிக தலைவராக என்னை தேர்வு செய்த விஜய்க்கும், நியமித்த ஆளுநருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.
விஜயின் அரசியல் பயணத்தை குறிப்பிட்ட அவர், “எண்ணற்ற தடைகள் மற்றும் இன்னல்களை எதிர்கொண்டு அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னேறியவர் விஜய்” என்று புகழாரம் சூட்டினார்.
இறுதியாக, “பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த சட்டசபையில் அவர்களின் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளோம். தமிழக மக்களுக்கு தொண்டாற்றுவது நமது கடமை என்பதை அனைத்து எம்எல்ஏக்களும் உணர வேண்டும்” என கருப்பையா தெரிவித்தார்.
இந்த உரை தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
