புதுடில்லி: நக்ஸல் தீவிரவாதத்திடம் இருந்து நாட்டை முழுமையாக விடுவித்தது பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மக்களவையில் நடைபெற்ற இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து பேசிய அவர், மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதாக கூறினார்.
பாதுகாப்புப் படையினரின் தீவிர தேடுதல் வேட்டையால் அஞ்சி பல நக்ஸல் தீவிரவாதிகள் சரணடைந்ததாகவும், சிலர் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் 12 மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் பரவி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலை ஏற்பட்டிருந்தது என்றும், இதனால் 12 கோடி மக்கள் வறுமையில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், 5,000 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 20,000 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு தேவையான வீடு, குடிநீர், கல்வி மற்றும் வங்கி வசதிகளை வழங்க தவறிவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டினார்.
நக்ஸல் தீவிரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், பீர்சா முண்டாவுடன் ஒப்பிடுவதை அவர் கண்டித்தார். நக்ஸல் வன்முறையால் பல ஆண்டுகளாக மக்கள் வறுமையில் சிக்கியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் தனி ஆட்சி நிலவியதாகவும், வளர்ச்சி பணிகள் தடைசெய்யப்பட்டதாகவும், மக்களுக்கு வாக்களிக்க கூட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும், ஆயுதங்களை கைகளில் எடுப்பது எந்த தீர்வையும் அளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் நக்ஸல் தீவிரவாதத்தின் தாக்கம் குறைந்து, தற்போது அந்த பகுதி வளர்ச்சி பாதையில் நகர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
நக்ஸல் இல்லாத இந்தியாவை உருவாக்கியதில் மத்திய ஆயுதப்படைகள், சிஆர்பிஎப், கோப்ரா படை, மாநில காவல்துறை மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அமித் ஷா பாராட்டினார்.
