சென்னை: “தோல்வி பயத்தில் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் அதிகாரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்,” என த.வெ.க. பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டினார்.
சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். தேர்தல் கமிஷன் அனுமதியுடன், நான்கு இடங்களில் விஜய் தேர்தல் பிரசாரம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார்.
பெரம்பூரில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றபோது போக்குவரத்து சீராக இருந்ததுடன், மக்கள் கூட்டமும் அதிகமாக இல்லை என அவர் குறிப்பிட்டார். காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் தங்களது பிரசாரம் நடைபெற்றதாகவும் அவர் விளக்கினார்.
பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் திட்டமிட்டு சிக்கல் ஏற்படுத்தப்பட்டதாகவும், தாங்கள் செல்லும் பாதை முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், விஜய் கொளத்தூர் தொகுதிக்குள் வரக்கூடாது என்ற நோக்கில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், தனது தொகுதியில் பிறர் பிரசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்க முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பு போதிய அளவில் இல்லை என்றும், குறுகிய சாலைகளில் மக்கள் திரள்வதை முன்கூட்டியே தெரிவித்திருந்தும் உரிய திட்டமிடல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
“முதல்வர் மட்டும் ரோடு ஷோ நடத்தலாம், நாங்கள் நடத்தக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பிய அவர், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவே விஜய் அங்கிருந்து விலகினார் என்றார்.
மேலும், 26 கட்சிகள் கூட்டணியில் உள்ளதாகக் கூறும் முதல்வர், தங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சில இடங்களில் காவல்துறை சரியாக செயல்பட்டாலும், கொளத்தூரில் மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் கமிஷன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், நெரிசல் காரணமாக கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
