தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியில் ஏற்பட்ட கடன் சுமையை காரணமாகக் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதை பாஜக ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் வெள்ளை அறிக்கையில் மாநிலத்தின் கடன் நிலை குறித்து மட்டும் பேசப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு செயல்படுத்தப் போகிறது என்பது குறித்து முதல்வர் விஜய் இதுவரை எந்த தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் நிதிநிலை குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்த போதிலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்குவது, திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் ஏன் அளிக்கப்பட்டன என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், கடந்த ஆட்சியின் கடனை காரணமாகக் காட்டி அவற்றை கைவிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், தமிழக பாஜக அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
