தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
வேடநத்தம் பகுதியை சேர்ந்த மாணவி மார்ச் 10ஆம் தேதி திடீரென மாயமானார். மறுநாள் அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஆடைகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், மாணவி மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட போதும் உடனடி நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், முக்கிய குற்றவாளியாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்ததாவது: இந்த வழக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
