திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தொடர்பான ரூ.25 லட்சம் தரிசன டிக்கெட் முறைகேடு மற்றும் லஞ்ச புகார் விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கோவிலில் ரூ.100 விரைவு தரிசன டிக்கெட்டுகள் தொடர்பாக முறைகேடு நடைபெற்றதாகவும், டிக்கெட் வசூலில் சுமார் ரூ.25 லட்சம் மோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோவில் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, “முறைகேடுகளை தடுக்காமல் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்?”, “ரூ.25 லட்சம் முறைகேட்டில் தொடர்புடையவர்களின் குற்ற விவரங்கள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கோவிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு, கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, தினசரி எத்தனை பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர் என்பதையும் நீதிமன்றம் கேட்டறிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை ஜூன் 8ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது
