திமுகவில் இருந்து விலகினார் மீனா ஜெயக்குமார்; சமூக வலைதள விமர்சனம் எதிரொலி
கோவை: திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலராக இருந்த மீனா ஜெயக்குமார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மீனா ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வேலுவின் ஆதரவாளராக அறியப்படுகிறார். அவரது கணவர் ஜெயக்குமார் மருதமலை கோவிலின் தக்காராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் லால்குடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டினை அவரது வீட்டிற்கு சென்று மீனா வாழ்த்தினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான மீனா ஜெயக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை பதிவு செய்தார்.
அதில், “நானும் லீமா ரோஸ் மார்ட்டினும் 20 ஆண்டுகளாக குடும்ப நண்பர்கள். ஒரு நிமிடத்தில் உடைந்து போகும் நட்பு அது அல்ல. நான் கட்சி மாறவில்லை.
நீங்கள் பேசிய பிறகு, இதுவும் நல்லாதான் இருக்கிறது என்று தோன்றுகிறது. கட்சியில் இருந்து ஒருவரை அனுப்புவது தலைவர் அல்ல; உங்களை போன்றவர்கள்தான். திமுக ஏன் இப்படியாகி விட்டது தெரியுமா? சமூக வலைதளங்களில் இப்படிப் பேசுபவர்களால்தான்.
எனக்கென ஒரு திறமை இருக்கிறது. ஒரு சக்தி இருக்கிறது; அந்த சக்தி சும்மா விடாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், திமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலிலும் பங்கேற்றிருந்தார். ஆனால் அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும், 2022ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது மேயர் பதவிக்கான வாய்ப்பும் உட்கட்சி அரசியல் காரணமாக மறுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
