“தவறுகளில் இருந்து பாடம் கற்கவில்லையா?” – தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: “கடந்த கால தவறுகளில் இருந்து தேசிய தேர்வு முகமை எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என்று நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக ஆண்டுதோறும் ‘நீட்’ பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
தேர்வுக்கு முன்பாகவே நீட் வினாத்தாள் சமூக வலைதளங்கள் மூலம் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. பின்னர் வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதாக கூறி, ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை கடந்த 12ஆம் தேதி அறிவித்தது.
மேலும், வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக் மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, இடைத்தரகர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நீட் தேர்வை நடத்தும் பொறுப்பில் இருந்து தேசிய தேர்வு முகமையை நீக்கி, தன்னாட்சி பெற்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மருத்துவர்கள் முன்னணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும், வினாத்தாள் கசிவை தடுக்க நீட் தேர்வை முழுமையாக கணினி வழியில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது நீதிபதிகள், “கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு வழங்கிய பரிந்துரைகள் என்ன ஆனது? தற்போது அந்த குழுவின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
