நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் அறிவிப்பு விழா சென்னை நடைபெற்றது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நான் பேசினாலே பிரச்சினை தான். பேசாமல் இருந்தாலும் விமர்சனம், பேசினாலும் விமர்சனம். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை விரும்புபவர்களுக்கு எல்லாமே பிடிக்கும் என்று நினைப்பதும் தவறு” என்று கூறினார்.
படத்தின் இயக்குநர் தேர்வு குறித்து பேசிய அவர், முதலில் வேறு இயக்குநர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், படத்தின் கதையை கேட்டு முடிவு செய்யும் முழு பொறுப்பையும் கமல்ஹாசன் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அது தனக்கு பெரிய பொறுப்பாக இருந்ததாகவும் கூறினார்.
கமல்ஹாசனுடனான பல ஆண்டுகால நட்பை நினைவுகூர்ந்த ரஜினி, தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் கமல் வழங்கிய ஆதரவு மற்றும் ஊக்கத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
