சென்னை: விஜய்யை, இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களின் தலைவர்கள் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
கடந்த மே 14ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, BMW Group India நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ், TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் லட்சுமி வேணு உள்ளிட்டோர் முதல்வர் விஜய்யை சந்தித்தனர்.
அதேபோல், Yamaha Motor India குழுமத்தின் தலைவர் ஜிம் ஆட்டா, பெருநிறுவன இயக்குநர் அட்சுஷி நாகாஷிமா மற்றும் துணைத் தலைவர் குமார் ஆகியோரும் முதல்வரை நேரில் சந்தித்து உரையாடினர்.
இந்த சந்திப்பில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாநில வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளுக்காக தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என முதல்வர் விஜய் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
