உத்தர பிரதேசத்தில் சூறாவளி, கனமழை கொடூரம்: 100க்கும் மேற்பட்டோர் பலி
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை வீசிய சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை மாநிலத்தின் பல பகுதிகளில் திடீரென வானிலை மாறி, கருமேகங்கள் சூழ்ந்ததுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து கனமழையும் பெய்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
சிலர் பெரிய மரங்கள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் தஞ்சம் அடைந்த நிலையில், சூறாவளி காற்றின் வேகத்தால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகளும் கீழே விழுந்தன.
இந்த விபத்துகள் மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக பிரயாக்ராஜ் நகரில் 21 பேரும், பதோஹியில் 18 பேரும், மிர்சாப்பூர்வில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பதேபூர்வில் 10 பேரும், உன்னாவோ மற்றும் பதுவான் பகுதிகளில் தலா 6 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பிரதாப்கார்க், பேரலி, சிதாப்பூர், ரே பரேலி, சந்தவுலி, கான்பூர் தேஹட், ஹர்தோய் மற்றும் சம்பல் உள்ளிட்ட பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சாலைகளில் ஏராளமான மரங்கள் விழுந்ததால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இதனிடையே, யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
