சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநில அரசின் தலைமை செயலாளர் முருகானந்தத்தை மாற்றம் செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் புகார்களுக்கு உள்ளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசிர்வாதமும் மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
