குடியாத்தம்:
குடியாத்தத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது சவ ஊர்வலம் சென்றதை நல்ல சகுனமாகக் குறிப்பிட்டு, அந்த தொகுதியில் வெற்றி உறுதி என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரதாப்பை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
குடியாத்தம் தனது சொந்த ஊராக இருப்பதால், இங்கு வரும்போது புதுப்புது உற்சாகம் கிடைக்கிறது. அருகிலுள்ள செம்பேடு கிராமம் தனது பூர்வீகம் என்றும், சொந்த மண்ணில் மக்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
விஜயகாந்த் இந்த ஊரின் மாப்பிள்ளை என்றும், காமராஜருக்கு வெற்றி தந்த முக்கியமான தொகுதி குடியாத்தம் என்றும் கூறினார். தேசிய கொடியை உருவாக்கிய புனிதமான மண்ணில் மகளாக நிற்பதில் பெருமை இருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு யார் போட்டியிட்டாலும், கேப்டன் களத்தில் இருப்பதாக நினைத்து வாக்களிக்க வேண்டும் என்றும், இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெற்று மீண்டும் வந்து நன்றி தெரிவிப்பேன் என்றும் உறுதியளித்தார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. எத்தனை அணிகள் இருந்தாலும், தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
தே.மு.தி.க. மட்டுமின்றி, தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ் கட்சிகளுக்காகவும் பிரசாரம் செய்து வருவதாக தெரிவித்தார். அண்ணா கூறிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கையை பின்பற்றும் கட்சிதான் இது என்றும், அதையே விஜயகாந்த் கற்றுத்தந்தார் என்றும் கூறினார்.
இந்தப் பகுதியின் அனைத்து ஊர்களும் தனக்குத் தெரியும் என்றும், பழையவற்றை மறக்காதவர் தான் என்றும் தெரிவித்தார்.
இந்த நேரத்தில், அவர் பேசிக் கொண்டிருக்கும்போது சவ ஊர்வலம் அந்த வழியாக வந்தது. உடனே தனது பேச்சை நிறுத்தி, தொண்டர்களை அமைதியாக இருக்குமாறு கூறி, ஊர்வலத்திற்கு வழி விடுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், சவ ஊர்வலம் கடந்து செல்லும் போது கையெடுத்து கும்பிட்டு மரியாதை செலுத்தினார். பொதுவாக நல்ல காரியத்திற்கு செல்லும்போது சவ ஊர்வலம் வந்தால் நல்ல சகுனம் என கூறப்படுவதால், குடியாத்தத்தில் வெற்றி உறுதி என அவர் தெரிவித்தார்.
