தமிழக எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் ரூ.75 ஆயிரம் உயர்வு: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.1.05 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் ரூ.75 ஆயிரம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியமாக ரூ.1.05 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இதுதவிர, அவசரகால மருத்துவச் செலவுகளுக்காக ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
கார் மற்றும் அலுவலக உதவியாளருக்கான செலவுகள்
சட்டசபையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஓட்டுநர் மற்றும் எரிபொருள் செலவுகளுக்கு மாதம் ரூ.75 ஆயிரமும், அலுவலக உதவியாளரை நியமித்து ஊதியம் வழங்குவதற்காக ரூ.25 ஆயிரமும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் கார் வழங்குவதற்காக ரூ.15 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விடுவிக்கப்பட உள்ளது.
மாத ஊதியம் ரூ.1.80 லட்சமாக உயர்வு
ஓட்டுநர், எரிபொருள் மற்றும் அலுவலக உதவியாளருக்கான செலவுகளை உள்ளடக்கிய வகையில் எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் ரூ.1.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திர நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.
