கோவை: தனியார் பள்ளிகளின் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகள் ஒற்றைச்சாளர முறையில் எளிமையாக்கப்பட்டுள்ளதால், இனி எந்தவித லஞ்சமும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Rajmohan தெரிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 39வது அரசு பொருட்காட்சியை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பெண் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வீடியோவில் ஏற்பட்ட பிழை குறித்து விளக்கமளித்தார்.
அரசு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்படும் வீடியோக்கள் இனி தமிழ் வளர்ச்சித் துறையின் ஒப்புதலுக்கு பின்னரே வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான நடைமுறைகள் தற்போது ஒற்றைச்சாளர முறையில் மேற்கொள்ளப்படுவதால், இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார். இதனால் பள்ளி நிர்வாகங்கள் எந்தவித லஞ்சமும் வழங்க தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக, பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட்டு, நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கோவையில் தொடங்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் 26 அரசு துறைகள் மற்றும் 6 அரசு சார்ந்த நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15 மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
