ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையை தேசிய மாநாட்டு கட்சி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த பிராந்தியத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு சமூக, மத மற்றும் அரசியல் அமைப்புகளிடமிருந்து நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுவிற்பனைக்கு முழுமையான தடை விதிக்கும் நடவடிக்கையை ஒமர் அரசு தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான சட்ட வரைவு தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் கூறுகையில், “முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான அரசு, கலால் வருவாயை விட பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது” என்றார்.
மேலும், “மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜம்மு – காஷ்மீரில் மதுவிற்பனைக்கு விரைவில் முழு தடை விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
“இதற்கான சட்ட வரைவு இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மதுவிலக்கு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றும் அவர் கூறினார்.
