சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள மொத்தம் 16 சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக 13 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று அறிவித்தார். முன்னதாக கூட்டணிக் கட்சிகளுடன் செய்யப்பட்ட தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. எஞ்சிய 3 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக போட்டியிடும் தொகுதிகள்: ஆர்.கே. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர் (தனி), எழும்பூர் (தனி), ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்: மயிலாப்பூர் (பாஜக), சைதாப்பேட்டை (அமமுக), பெரம்பூர் (பாமக).
சென்னை மாவட்டத்தில் உள்ள இந்த 16 தொகுதிகளிலும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியே முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. மொத்தம் 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. வேளச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த 16 தொகுதிகளில் தியாகராய நகர், மயிலாப்பூர், விருகம்பாக்கம், அண்ணாநகர் ஆகிய 4 தொகுதிகளில் திமுக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக தியாகராய நகர் தொகுதியில் வெறும் 137 ஓட்டு வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது.
அதேபோல், வேளச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அதிமுகவை விட வெறும் 3352 ஓட்டுகள் மட்டுமே அதிகமாக பெற்றிருந்தது.
2021 தேர்தலை ஒப்பிடும்போது, 2026 தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இருப்பதால், இந்த முறை சென்னையில் திமுக மற்றும் அதிமுக இடையே யார் முன்னிலை பெறுவார்கள் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.
