செந்தில் பாலாஜி தொடர்புடையதாகக் கூறப்படும் மின்மாற்றி கொள்முதல் ஊழல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்கள் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் சுமார் 397 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் சில அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாக கருதப்படும் டெண்டர் ஆவணங்கள் மற்றும் அவை தொடர்பான கணினி ஹார்டு டிஸ்க்கள், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து காணாமல் போனதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ராணிப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்கள் தற்போது சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், மின்மாற்றி கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்த சில முக்கிய ஆவணங்களும் சிபிஐ வசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
