சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட நடைபயணம் நடைபெற உள்ளது.
பாஜகவிலிருந்து விலகிய பிறகு அண்ணாமலை தொடங்கிய ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பில் இதுவரை 19.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இந்த இயக்கம் நேரடியாக களமிறங்கும் என அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்காக கோவையில் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, விருப்ப வேட்பாளர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தவும், பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு மக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டிலும் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.
அடுத்த மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள அமைப்பு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் தூய்மை பணியை தொடங்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம் நடைபெறவுள்ளது. இதற்கான காவல்துறை அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியதும் ‘வீ த லீடர்ஸ்’ முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றும், அந்த இலக்கை எட்ட முடியாவிட்டால் அமைப்பின் பெயரிலேயே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
