விக்டோரியா: சீசெல்ஸ் நாட்டின் 50வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது பெருமைக்குரிய தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சீசெல்ஸுக்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த பயணத்தின் போது, சீசெல்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும், சீசெல்ஸ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, 500 மெட்ரிக் டன் அரிசி, 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை சீசெல்ஸ் அரசிடம் ஒப்படைத்தார்.
அத்துடன், சீசெல்ஸ் தொழில்முறை மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். மேலும், ரூ.1,250 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதனைத் தொடர்ந்து, ஸ்டாட் லினிட்டே மைதானத்தில் நடைபெற்ற சீசெல்ஸ் நாட்டின் 50வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
