சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆஜராக டெல்லி போலீஸார் சம்மன்
புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். இருவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர மறுஆய்வு (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் சிஜேபி அமைப்பினரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிஜேபி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, அவர்களது தரப்பில் தனிநபர் பிணை மற்றும் அமைதியைப் பேணுவதற்கான பிணைப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏழு நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு, டெல்லி சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது.
போலீஸ் சம்மன்
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் அக்டோபர் 22ஆம் தேதி டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம் நடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்காக இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிஜேபி நிர்வாகி அஜிங்கியா ஷிண்டேவுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
