கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகளில் ரூ.3.20 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2022ஆம் ஆண்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாமல், பணிகள் முடிந்ததாகக் காட்டி ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கு ரூ.3.20 கோடி வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது.
அந்தப் புகாரில், கரூர் மாவட்டத்தின் பல்வேறு சாலைகளை தரம் உயர்த்த ரூ.4.19 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், பணிகள் நடைபெறாமல் நிதி வழங்கப்பட்டதாகவும், பின்னர் ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவசரமாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று காலை முதல் சோதனைகளை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களிலும், அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது கூட்டுச்சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
