தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக வருகை தந்தது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று சில முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏக்களாக பதவியேற்று வருகின்றனர்.
இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். அதேநேரத்தில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் பெரும்பாலான அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவியேற்றபோது சில உறுப்பினர்கள் மட்டுமே மேஜையைத் தட்டியதாகவும், ஆனால் எஸ்.பி. வேலுமணி பதவியேற்றபோது பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டி வரவேற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவைக்கு வந்திருந்தாலும், எம்எல்ஏவாக பதவியேற்காமல் வெளியேறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
