கோவை: அ.தி.மு.க. அளித்த புகாரின் பேரில், கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.வினர் அமைத்திருந்த கூடாரங்களில் 10 இடங்களில் தேர்தல் பிரிவினர் நேற்று அகற்றும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை அடைத்து வைக்கும் வகையில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், மாவட்ட தேர்தல் அதிகாரி பவன்குமார் அவர்களிடம் மனு அளித்தார். இதற்கான ஆதாரமாக 40 இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து, மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை அ.தி.மு.க. வக்கீல் அணியினர் நேரில் சந்தித்து முறையிட்டனர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினார்.
அதன்படி, தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், எந்தெந்த இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது.
முதல் கட்டமாக 10 இடங்களில் கூடாரங்கள் அகற்றப்பட்டன. மீதமுள்ள இடங்களில், அவை சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களாக காட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கெம்பட்டி காலனி வைசியாள் வீதியில் சுயேட்சை வேட்பாளர் ஹக்கீம், தற்காலிக தேர்தல் பணிமனை அமைக்க அனுமதி கோரியிருந்தார். ஆனால், அது ஓட்டுச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அனுமதி இன்றி கூடாரம் அமைத்து தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி தியாகராஜன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு தி.மு.க. கொடிகள், போஸ்டர்கள், காலண்டர்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அந்த கூடாரம் நேற்று அகற்றப்பட்டது. இருப்பினும், மற்ற இடங்களில் கூடாரங்கள் இன்னும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
