திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கேரள சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து, காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்டது.
காங்கிரஸ் மேலிடம் நடத்திய தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, வி.டி.சதீஷனின் பெயர் முதல்வர் பதவிக்காக இறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சதீஷன் தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கேரள கவர்னர் அர்லேக்கர், வி.டி.சதீஷனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 பேரும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சிங் உள்ளிட்ட தலைவர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
அதேபோல், பதவி விலகிய கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பினாய் விஸ்வம் மற்றும் பாஜ மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர்.
