குஜராத்தில் ரூ.14,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவு பெற்ற சில திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனுடன், பிஎம்-கிசான் திட்டத்தின் 24-வது தவணையாக 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18,680 கோடி நிதியை பிரதமர் விடுவித்தார்.
புதிய ரயில் சேவைகள் தொடக்கம்
ஆமதாபாத் (சபர்மதி) – வாரணாசி விரைவு ரயில் மற்றும் மெஹ்சானா – பெச்சராஜி – சபர்மதி மெமு ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பிஎம்-கிசான் திட்டம் கோடிக்கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் குஜராத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.50 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகளின் நலனுக்குப் பல்வேறு திட்டங்கள்
பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக முந்தைய ஆட்சிகள் விவசாயிகளை ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டிய அவர், பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் கோதுமை மற்றும் நெல் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறு விவசாயிகளுக்கு அரசு ஆதரவு
நாட்டின் மொத்த விவசாயிகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறு விவசாயிகள் எனக் குறிப்பிட்ட பிரதமர், முந்தைய காலங்களில் அவர்களின் தேவைகள் போதிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றார். பாஜக அரசு சிறு விவசாயிகளின் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலால் உரங்களின் விலை அதிகரித்தபோதும், அதன் சுமை விவசாயிகளைப் பாதிக்காமல் தடுக்க அரசு சுமார் ரூ.16 லட்சம் கோடி செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பயிர் காப்பீட்டின் மூலம் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு
விவசாயிகளின் நலனில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த 12 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
