தஞ்சாவூர்: தமிழக மக்களை கவர்ச்சி மற்றும் மாயாஜாலம் மூலம் சிலர் ஈர்த்துள்ளதாகவும், ஆனால் மக்கள் மீண்டும் திமுகவிடம் திரும்புவார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் Udhayanidhi Stalin தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தவெக அரசை மறைமுகமாக விமர்சித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பத்து நாட்களிலேயே தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை தமிழக மக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஜென்சி கிட்ஸ் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். காலப்போக்கில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்,” என்றார்.
மேலும், “தாயின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தை, கிலுகிலுப்பை ஆட்டி விளையாட்டு காட்டும் ஒருவரை பார்த்து மயங்கி அவரிடம் செல்லலாம். ஆனால் அந்த குழந்தை அங்கே நிரந்தரமாக இருக்காது. உண்மையான பாசம் எது என்பதை உணர்ந்து மீண்டும் தாயிடம் திரும்பி வரும்,” என்றும் கூறினார்.
அதேபோல், “கவர்ச்சி மற்றும் மாயாஜாலம் மூலம் சிலர் மக்களை ஈர்த்துள்ளனர். ஆனால் அந்த கவர்ச்சி மக்களின் எந்த பிரச்னைக்கும் தீர்வாக அமையாது,” என அவர் தெரிவித்தார்.
“தமிழகத்திற்கு தாயாக இருக்கும் திமுகவையும், எங்கள் தலைவரையும் நோக்கி மக்கள் மீண்டும் வருவார்கள். நிச்சயம் சூரியன் மறுபடியும் உதிக்கும்,” என்று உதயநிதி தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.
