உஜ்ஜைனி: உலகளவில் பயன்படுத்தப்படும் கிரீன்விச் சராசரி நேரத்திற்கு பதிலாக, உஜ்ஜைனியை மையமாகக் கொண்ட ‘மஹாகால்’ நேரத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் Dharmendra Pradhan வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ‘மஹாகால்’ என்ற பெயரில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், உஜ்ஜைனி ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படும் இடமாகும் என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், உஜ்ஜைனியில் காலக் கணக்கீடு மத அடிப்படையிலேயே இல்லாமல், அறிவியல் அடிப்படையிலும் முன்னேற்றம் பெற்றிருந்தது. நம் முன்னோர் ‘சூர்ய சித்தாந்தம்’ போன்ற பல நூல்களில் காலம் மற்றும் வானியல் குறித்து ஆழமாக எழுதியுள்ளனர் என்றார்.
நேரம் மற்றும் வானியல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதால், உஜ்ஜைனியை வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் அறிவியல் மையமாகவும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பழங்காலத்தில் நம் நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் கோள்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்பட்டதாகவும், அந்த முறை மிகவும் துல்லியமானதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
தற்போது பயன்படுத்தப்படும் கிரீன்விச் நேரத்தை விட, நம் பாரம்பரிய காலக் கணக்கீடு மேம்பட்டதாக இருந்ததால், காலனித்துவ மனநிலையிலிருந்து விலகி, பாரம்பரிய அறிவியல் கல்வியை முன்னிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பூமத்திய ரேகையும் கடக ரேகையும் சங்கமிக்கும் இடமாக உஜ்ஜைனி இருந்ததாகவும், பழங்காலத்தில் உலக நேரம் இங்கிருந்தே கணக்கிடப்பட்டதாகவும் கூறினார்.
அதனால், கிரீன்விச் சராசரி நேரத்தை மாற்றி, ‘மஹாகால் நிலையான நேரம்’ உலகளவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது இந்தியாவின் அறிவியல் பாரம்பரியத்திற்கு உலகளவில் மரியாதையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
