சென்னை: “காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது” என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்பே கட்சித் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறினார்.
கோர் கமிட்டியிலும் இதே கருத்தை தெரிவித்ததாகவும், தலைமைக்கு அனுப்பப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும் விளக்கினார். மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமும் இதை முன்கூட்டியே தெரிவித்ததாக கூறினார்.
“கட்சி என்னுடைய கருத்தை மதித்து, என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது. அதனால் மகிழ்ச்சி. மாநிலம் முழுவதும் பாஜ மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக நான் பிரசாரம் செய்வேன்” என தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதையும் குறிப்பிட்ட அவர், “ஒவ்வொரு ஊருக்கும் சென்று பிரசாரம் செய்து, வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என் கடமை” என்றார்.
“நான் எந்த தொகுதியையும் கேட்கவில்லை; போட்டியிட முயற்சிக்கவும் இல்லை. இந்த தேர்தலில் என் முழு கவனம் பிரசாரமே” என கூறினார்.
2024 பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டபோது, மற்ற வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய முடியாதது ஒரு குறையாக இருந்ததாகவும், அதை இந்த தேர்தலில் சரிசெய்ய விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், “இன்னும் பல தேர்தல்கள் வர இருக்கின்றன. அப்போது போட்டியிடலாம். தற்போது மக்கள் மத்தியில் சென்று திமுக அரசின் குறைகளை எடுத்துரைப்பதே முக்கியம்” என கூறினார்.
