ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளிப் பதக்கம் மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் பதக்கப் பயணத்தில் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் முக்கிய பங்காற்றினர். இந்தத் தொடரில் இந்திய குத்துச்சண்டை அணி மட்டும் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. மேலும் பளுதூக்குதல், ஜூடோ, தடகளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவித்தனர்.
இந்திய அணிக்காக மொத்தம் 38 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர். இதில் குல்வீர் சிங் இரண்டு பதக்கங்களை கைப்பற்றி தனித்துவமான சாதனையை பதிவு செய்தார். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் பிரிவிலும் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.
இந்த வெற்றி, 2030-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்தியாவின் தயாரிப்புக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
