திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி சார்பில் இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஜெபக்கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் மத வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, ஹிந்து முன்னணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஜெபக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்றதைத் தொடர்ந்து, ஹிந்து முன்னணியினர் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பள்ளி வளாகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இந்த போராட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் டாக்டர் அரசுராஜா, மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில செயலாளர் குற்றாலநாதன், திருநெல்வேலி கோட்டத் தலைவர் தங்க மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேரை போலீசார் கைது செய்து பின்னர் சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், அரசு உத்தரவை மீறி அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் ஜெபக்கூட்டம் நடைபெற்றதை எதிர்த்து போராடியவர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார்
