தமிழக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களின் பின்னணியில், காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவைத் தொடர்ந்து மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகளை மாற்றித் தருமாறு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காததால் பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் மாற்றம் திமுக வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போது காங்கிரஸ் எம்.பி.க்களின் இருக்கைகளுக்கு அருகில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் அமைந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் தற்போது கூட்டணி உறவு முறிந்துள்ளதால், திமுக எம்.பி.க்களுக்கு தனியான இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதற்காக இருக்கை அமைப்பை மாற்றித் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
