சென்னை: விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குமாறு, தமிழக வெற்றிக் கழக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள அலுவலகங்களில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் ஆகியோரை நிர்மல்குமார் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, “எங்கள் தரப்பில் இருந்து ஆதரவு கோரி கடிதம் வழங்கியுள்ளோம். நீங்கள் ஆதரவு அளிப்பதாக கூறிய நிலையில் ஏன் தாமதம் செய்கிறீர்கள்? உங்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். விரைவில் முடிவை தெரிவிக்கவும்” என நிர்மல்குமார் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு பதிலளித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசித்த பிறகு விரைவில் முடிவை தெரிவிப்போம் என கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், நிர்மல்குமாரின் மொபைல் போன் மூலம் விஜயும் இரு தலைவர்களுடன் பேசி ஆதரவு கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல்குமார், “சட்டப்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். தமிழக மக்களில் பெரும்பாலானோர் விஜய் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்துடன் வாக்களித்துள்ளனர். அதற்கு மதிப்பளித்து கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்” என்றார்.
வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும், “எங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை த.வெ.க. அணுகவில்லை என்றும், அத்தகைய எண்ணமே இல்லை என்றும் நிர்மல்குமார் கூறினார்.
மேலும், “போலீஸ் பாதுகாப்பால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்பதால், பாதுகாப்பு தேவையில்லை என்று விஜய் கூறியுள்ளார். கவர்னர் சட்டப்படி முடிவெடுக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.
