புதுடில்லி: இந்தியா மற்றும் கனடா இடையே அணுசக்தி மற்றும் அரிய வகை கனிமங்கள் துறைகளில் வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் அணுமின் உற்பத்தி தேவைக்காக 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான யுரேனியத்தை 2035ம் ஆண்டு வரை வழங்க கனடா முன்வந்துள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். மும்பையில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்த அவர், பின்னர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் அணுமின் உற்பத்திக்கான யுரேனியம் வழங்கும் ஒப்பந்தம் முக்கியமானதாகும்.
இதன் மூலம் இந்திய அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம் நீண்ட காலத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரிய வகை கனிமங்கள் துறையிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், 2030க்குள் இந்தியா–கனடா இருநாட்டு வர்த்தகத்தை 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு என தெரிவித்தார்.
மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, தொழில்நுட்பம், மேம்பட்ட ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கூட்டுறவு உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
சிறிய ரக அணு உலைகள் மற்றும் மேம்பட்ட அணு உலைகள் அமைப்பது குறித்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுடன் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், சூப்பர் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் உற்பத்தி போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.
மேலும் விண்வெளி துறையில் இளம் தொழில்முனைவோர்களை இணைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
