அமெரிக்காவின் Ohio மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 குழந்தைகள் நான்கு ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hampton பகுதியில் நடைபெற்ற காவல்துறை சோதனையின்போது, ரயில் தண்டவாளம் அருகே மரங்கள் மற்றும் புதர்களால் சூழப்பட்டிருந்த ஒரு வீட்டில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் சுமார் 12×12 அடி அளவுள்ள சிறிய அறையில் ஒன்றரை வயது குழந்தை முதல் 16 வயது சிறுமி வரை மொத்தம் 16 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மனிதக் கழிவுகள் சூழ்ந்த சூழலில், போதிய உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு பேசக்கூட தெரியாத நிலை இருந்ததாகவும், வயதில் மூத்த சிறுமிக்கு தனது பெயரைக்கூட எழுதத் தெரியாத அளவுக்கு கல்வி மற்றும் சமூக தொடர்புகள் மறுக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் ஏன் இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மூடநம்பிக்கை, மனநலப் பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் குற்றப்பின்னணி காரணமாக நடந்ததா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
