பெய்ஜிங்: செயற்கை நுண்ணறிவு மற்றும் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு துளி ரத்தத்தில் இருந்தே புற்றுநோயை மிகத் துல்லியமாகக் கண்டறியும் புதிய கருவியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோவில் அமைந்துள்ள வெஸ்ட்லேக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த கருவி மூலம், ஒரே ஒரு சொட்டு காய்ந்த ரத்த மாதிரியை பயன்படுத்தி குடல், வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் நானோ தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, புற்றுநோய் கண்டறிதலில் மருத்துவ உலகில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயை கண்டறிவதில் இந்த புதிய முறை, தற்போது பயன்படுத்தப்படும் வழக்கமான பரிசோதனை முறைகளை விட 10,000 மடங்கு அதிக துல்லியத்துடன் செயல்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த கருவி மருத்துவ துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை விரைவில் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
