பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம்
புதுடில்லி: பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சுமார் 90 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் போர் விமானங்கள் ஏற்கனவே இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக, இந்தியா 36 ரபேல் போர் விமானங்களை வாங்கி விமானப்படையில் இணைத்திருந்தது.
இந்த நிலையில், மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை இந்தியா தற்போது இறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோரிக்கை கடிதம் அடுத்த சில வாரங்களில் பிரான்ஸ் அரசுக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, வாங்கப்படும் விமானங்களில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
சுமார் 90 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ள நிலையில், மீதமுள்ள விமானங்கள் முழுமையாக தயாரான நிலையில் பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட உள்ளன.
இதன் மூலம் இந்திய விமானப்படையின் திறன் அதிகரிப்பதோடு, உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கும் ஊக்கம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் விரைவில் பிரான்ஸ் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய கடற்படையும் விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்துவதற்காக அடுத்த சில ஆண்டுகளில் 26 ரபேல் போர் விமானங்களை இணைக்க திட்டமிட்டு வருகிறது.
இந்திய விமானப்படையில் நிலவும் போர் விமான பற்றாக்குறையை சரிசெய்து, பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
