கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, ஒரு இயக்கம் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நான் கூறியது உண்மைதான். ஒரு கட்சியின் கொடியும் சின்னமும் அதன் அடிப்படை அடையாளங்களாகும். அப்படியிருக்கும்போது, ஒரு இயக்கம் தன்னுடைய சின்னத்தை விட்டுவிட்டு மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, தனது தனித்துவத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும், பலருக்கும் தெரியாத ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டுமெனில், முதலில் தாம் சேர்ந்துள்ள கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர், எந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறாரோ, அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்த பிறகே தேர்தலில் களமிறங்க வேண்டும்.
நாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டதற்கான காரணம், கடைசி நேரத்தில் ஏற்பட்ட கட்டாய சூழல்தான். அதனால் ஏற்பட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனவேதனையை எங்களுடைய துரதிர்ஷ்டவசமாகவே கருதுகிறேன். இதை நான் ஆயிரம் முறை கூட கூறுவேன். ஒரு இயக்கம் மற்றொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக் கூடாது. அதை கட்சி தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எனது நிலைப்பாடு அதுதான்” என்றார்.
