ஐநா பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம்: இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியில், புதிதாகச் சேர்க்கப்படும் அனைத்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ் இதுகுறித்துப் பேசுகையில், வீட்டோ அதிகாரம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் வரை, சீர்திருத்தம் செய்யப்பட்ட பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகள் தங்களது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய கட்டமைப்பு 1945-ஆம் ஆண்டின் புவிசார் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பார்வதனேனி ஹரிஷ், இன்றைய உலகின் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அதில் விரிவான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்த நடவடிக்கைகளின்போது புதிதாக உருவாக்கப்படும் அனைத்து நிரந்தர உறுப்பினர் பதவிகளுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
