எரிபொருள் தட்டுப்பாடு விவகாரம்.. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மீது அமைச்சர் அதிருப்தி
புதுடில்லி: ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதலால் உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தனியார் எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கொண்டு வரும் கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரித்தன. ஆனால் ரிலையன்ஸ் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியில் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியை குறைத்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை ஏற்பட்டிருக்காது” என்று அவர் மறைமுகமாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “நாட்டின் சமையல் எரிவாயு தேவை சாதாரணமாக ஒரு நாளுக்கு 50 லட்சம் சிலிண்டர்கள். ஆனால் போர் சூழ்நிலை காரணமாக மக்களிடையே ஏற்பட்ட பதற்றத்தால் இந்த தேவை 75 லட்சம் சிலிண்டர்களாக உயர்ந்தது. இந்த நிலையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. அதனால் தான் பல கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது தனியார் எண்ணெய் நிறுவனங்களும் ஏற்றுமதியை விட நாட்டின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
