சென்னை: தன்னை கொலை செய்வதற்காக மும்பையைச் சேர்ந்த கூலிப்படை நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பின்னணியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் இருப்பதாகவும் சமூக ஆர்வலர் Savukku Shankar சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அருண் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ளதாகவும், தன்னை கொலை செய்யும் நோக்கில் மும்பையில் இருந்து கூலிப்படை நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் தகவல் வழங்கியதாகவும் கூறினார்.
அந்த தகவலின் அடிப்படையில், சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி இன்று அதிகாரப்பூர்வ புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 2025 செப்டம்பர் மாதத்திலும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கூலிப்படை மூலம் தன்னை குறிவைக்கும் முயற்சி நடந்ததாகவும், அப்போது கிடைத்த உளவுத்துறை தகவலை தொடர்ந்து அப்போதைய பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனை சந்தித்து புகார் அளித்ததாகவும் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவகாரத்தை வெளிப்படுத்தியதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் வசிக்கும் வீட்டில் மனித கழிவுகள் வீசப்பட்ட சம்பவம் நடந்ததாகவும், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தபோதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார்.
மேலும், அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக தொடர தகுதியற்றவர் என்றும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வே கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், இந்த நியமனங்களை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
