சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வித்தை தொடரின் 2ஆம் நிலை போட்டியில் இந்திய மகளிர் ரீகர்வ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. உலக வில்வித்தையில் எப்போதும் வலுவான அணியாக கருதப்படும் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தீபிகா குமாரி, அங்கிதா பகத் மற்றும் கும்கும் மோஹோத் ஆகியோர் இடம்பெற்றிருந்த இந்திய மகளிர் அணி, முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் இந்திய அணி வியத்நாமை கடுமையான போராட்டத்தில் 5-4 (28/25) என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை இந்திய அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் தென் கொரியா அணி, ஆசிய கோப்பைக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக இரண்டு புதிய வீராங்கனைகளை களமிறக்கியிருந்தது. அனுபவமிக்க வீராங்கனைகள் இல்லாத சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திய இந்திய அணி, 5-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு குறைந்தது வெள்ளிப் பதக்கம் உறுதியாகியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை சீனாவை எதிர்கொள்ள உள்ளது.
மற்றொரு புறம், ஆடவர் ரீகர்வ் அணிப் பிரிவில் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா மற்றும் யஷ்தீப் போகே ஆகியோர் அடங்கிய இந்திய அணி முதல் சுற்றில் பை பெற்ற நிலையில், இரண்டாவது சுற்றில் வங்கதேசத்திடம் 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
அதேபோல் கலப்பு அணிகள் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா மற்றும் அங்கிதா பகத் ஜோடி, பிரேசில் அணியிடம் 4-5 (19/19) என்ற கணக்கில் தோல்வி கண்டது.
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் ஓஜாஸ் பிரவின் தியோடேல் மற்றும் அதிதி சுவாமி இணை, அமெரிக்க ஜோடியிடம் 156-157 என்ற கணக்கில் காலிறுதியில் தோல்வியுற்றது.
