பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 23-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வென் டிஜக் முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதற்கு பதிலடியாக 57-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைய்டோ நாகமுரா கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து 64-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கிரைசென்சியோ சம்மர்வில்லே மீண்டும் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். எனினும், ஆட்டத்தின் இறுதிக்கட்டமான 88-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டைசி கமடா கோல் அடித்ததால், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் நிறைவடைந்தது.
